உலக செய்திகள்

சிரியாவில் தாக்குதல்- டிரம்ப் அறிவிப்பு…



அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு இரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

“இரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

இதேவேளை, சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே இராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“டஜன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வரம்பு மீறப்பட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

தாக்குதலுக்குள்ளான மொசூல் நகரிலிருந்து சுமார் 900 பொதுமக்கள் தப்பியோட்டம்.

wpengine

ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

wpengine

இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியான ஆதரவு’ – பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி..!

wpengine