உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவினால் அரசுடமையாக்கப்பட்ட வீடுகளை கையளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், அரசுடமையாக்கப்பட்ட மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத் தொகுதியை, உரிமையாளரிடமே கையளிக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சுட்டிக்காட்டிய, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, அந்த வீட்டை உரிமையாளரிடமே கையளிக்க, நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த இந்த விவகாரம் தொடர்பில், சிரேஷ்ட சட்டத்தரணி அனுப்பி வைத்துள்ள, கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகம் சிவராஜா, சிவராஜா சரோஜினி ஆகியோருக்கு சொந்தமான, கொழும்பு- 6 வெள்ளவத்தை சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டுத் தொகுதியில், மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத் தொகுதி, 2009ஆம் ஆண்டு அபகரிக்கப்பட்டது.

பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட அவசர கால ஒழுங்கின் 7(1ம்) விதியின் கீழே குறித்த மூன்று வீடுகள் அடங்கிய அந்த வீட்டுத்தொகுதி அரசுடமையாக்கப்பட்டது.

தொடர்மாடிக் கட்டடத்தில், மருத்துவ நிலையம் ஒன்றை நடாத்துவதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உரிமையாளர்களால் வாடகைக்கு கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழே, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், அவை அரச உடமையாக்கப்பட்டன.

வீட்டு, உரிமையாளர்களிடமிருந்து சட்டரீதியற்ற முறையில், அந்த வீட்டுத் தொகுதியை அரச உடமையாக்கியமைக்கு எதிராக, பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயளாளர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் உட்பட நால்வரை பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால், உயர்நீதிமன்றத்தில், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த இந்த மனு, உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்களான பீ.பி. அலுவிகார, அனில் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் 27ஆம் திகதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனுதாரர்களுக்கு உரித்தான, கொழும்பு-6 சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள, மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், அரச உடமையாக்கப்பட்டமை சட்டரீதியற்றது என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ததுடன் மேலும், அச் செயல்பாடு மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், மனுதாரர்களிடம் பிரதிவாதிகள் ஒப்படைப்பதுடன் மேலும், ஐந்து இலட்சம் ரூபாய், நட்டஈடாக மனுதாரர்களுக்கு வழங்குமாறும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…

wpengine

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு வருகிறது

wpengine

எவன்கார்ட் கப்பலின் கெப்டன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine