உள்நாட்டு செய்திகள்

அரசின் கடன் குற்றச்சாட்டுக்கு மஹிந்த அறிக்கை மூலம் பதில்



தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் உள்ள காலப் பகுதியில் மாத்திரம் வெளிநாட்டுக்கடனாக 6361 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுள்ளது.

குறித்த இந்த கடனுதவியினால் நாட்டில் ஒரு சிறிய பாலத்தையேனும் அமைக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்பொழுது முகம்கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு கடந்த அரசாங்க காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட கடன் தொகைதான் காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து, நேற்று (14) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

குறித்த அறிக்கையில்  அவர்  இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசாங்கம் முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடனேதான் காரணம். இந்த அரசாங்கம் பெற்றுள்ள இக்கடன் தொகையானது, தாம் தமது அரசாங்க காலத்தில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு செலவு செய்த தொகையை விடவும் விசாலமானது.

எரிபொருள் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்ததனால் மாத்திரம், இந்த அரசாங்கத்துக்கு 2500 மில்லியன் அமெரிக்க டொலரை மீதம் வைக்க முடிந்துள்ளது. இது இவ்வாறிருக்கையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், மின்சார சபையும் நஷ்டம் அடைந்துள்ளதாக அரசாங்கம் எவ்வாறு தெரிவிப்பது எனவும் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கையினால், இந்நாட்டு மக்கள் இன்னும் பாரிய வரி விதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். குடிநீர், மின்சாரம், தொலைபேசி, போக்குவரத்து போன்றவற்றுக்கான கட்டணங்களும் அதிகரிக்கும். வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

Related posts

அம்பகமுவ உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்திற்கு எதிராக மனுத் தாக்கல்…

wpengine

” மக்கள் மகிமை ” கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்

wpengine

கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்

wpengine